

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஸ்மேரி (45). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது மகளை மருத்துவக் கல்லுரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க முயற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு சென்னை சோழிங்க நல்லூரைச் சேர்ந்த ரம்யா (37) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ரம்யா தான் சுகாதாரத் துறையில் அதிகாரியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.
மேலும், தான் நினைத்தால் எம்பிபிஎஸ் சீட் பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய ரோஸ்மேரி, பல்வேறு தவணைகளாக ரூ.60 லட்சம் கொடுத்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் வைத்து இந்த பணத்தை ரம்யா வாங்கி உள்ளார்.
அப்போது, மருத்துவக் கல்லூரி டாக்டர் என்று அந்தோணிதாஸ் என்பவரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, ரோஸ்மேரியிடம் உங்கள் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கு அட்மிஷன் கிடைத்து விட்டது என்று கூறி, உத்தரவை காண்பித்து,விடுதி கட்டணமாக ரூ.1.38 லட்சம் செலுத்த வேண்டும் என்று ரம்யா, அந்தோணிதாஸ் வாங்கி உள்ளனர்.
இந்நிலையில், தனது மகளைமருத்துவக்கல்லூரியில் சேர்ப்பதற்கு ஆசையாக அழைத்து சென்ற போதுதான் ரம்யா, அந்தோணிதாஸ் ஆகியோர் போலியான அட்மிஷன் ஆர்டர் கொடுத்து ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பண மோசடியில் ஈடுபட்ட ரம்யா, அந்தோணிதாஸ் ஆகியோருக்கு ரோஸ்மேரி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனால், அவர்கள் 2 பேரும் பல்வேறு தவணைகளாக ரூ.29.50 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளனர். ஆனால், மீதமுள்ள ரூ.31.88 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ரம்யா, சுகாதாரத் துறை அதிகாரி இல்லை என்பதும், அவர் பொய்யான தகவலை கூறி ரோஸ் மேரியை மோசடி வலையில் வீழ்த்தி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போல், அந்தோணிதாசும் டாக்டர் இல்லையென கண்டறிந்தனர். இதையடுத்து, ரம்யா கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில், மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தாக போலீஸார் தெரிவித்தனர். புகாருக்குள்ளான அந்தோணிதாசிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.