

சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வந்த வாராந்திர விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த இரு பைகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.50 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆர்பிஎஃப் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டியன் தலைமையில் துணை உதவி ஆய்வாளர் அன்பு செழியன், தலைமைக் காவலர் கண்ணன் உள்ளிட்ட ஆர்பிஎஃப் போலீஸார் நேற்று காலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 7-வது நடைமேடையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரி செல்லும் வாராந்திர விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று ஆர்பிஎஃப் சோதனை செய்தனர்.
உரிமை கோரப்படாத பைகள்: இச்சோதனையில் ரயில் பெட்டிக்குள் யாரும் உரிமை கோரப்படாத 2 பைகள் இருந்தன. ஒரு பையை திறந்தபோது அதில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். மற்றொரு பையில் 40 கிலோ எடைக்கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம். இவற்றை கைப்பற்றி, அண்ணா நகர் மேற்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.