

கோவை: கோவை மாநகரில் ‘பீட்’களின் எண்ணிக்கையை அதிகரித்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், அவசர அழைப்பு தகவலை பெற்ற 11.35 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு ஜனவரி இறுதி முதல் 24 மணி நேர ரோந்துப் பணி நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, 52 ‘பீட்’கள் ஏற்படுத்தப்பட்டன.
ஒரு பீட்டில் ஒரு ஷிப்ட்டுக்கு ஒருவர் என, 3 ஷிப்ட் அடிப்படையில் 156 போலீஸார் ‘பீட்’ ரோந்துப் பணிக்கு ஒதுக்கப்பட்டனர். இவர்கள், காலை முதல் மதியம், மதியம் முதல் இரவு, இரவு முதல் அதிகாலை வரை என 3 ஷிப்ட் அடிப்படையில் மாநகரில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக, பொதுமக்கள் அழைக்கும் அவசர கால அழைப்புகளை விரைவாக எதிர்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கோவையில் 24 மணி நேர ரோந்து திட்டத்தில் மொத்தம் 52 ‘பீட்’கள் இருந்தன. இதில், 7 ‘பீட்’ கூடுதலாக்கப்பட்டு, மொத்தம் 59 ‘பீட்’களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வடவள்ளி, துடியலூர், சரவணம்பட்டி, பீளமேடு, சிங்காநல்லூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் ஆகிய 7 காவல்நிலையங்களை மையப்படுத்தியுள்ள பகுதிகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டன.
தவிர கடைவீதி, காட்டூர், செல்வபுரம், ரேஸ்கோர்ஸ், உக்கடம், பீளமேடு மற்றும் குனியமுத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் உள்ள ரோந்து போலீஸாருக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கேமராவை ‘ஆன்’ செய்தால் அவர்கள் ரோந்து செல்லும் பகுதி முழுவதும் பதிவாகும்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் 100 என்ற அவசரகால தொடர்பு எண்ணை அழைத்து தகவல் தெரிவிப்பர். அந்த அழைப்பு உடனடியாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும். தொடர்ந்து அழைப்பு கிடைத்த இடத்துக்கு அப்பகுதியில் பணியில் இருக்கும் ரோந்து போலீஸார் சென்று புகார் தெரிவித்தவர்களிடம் பிரச்சினை குறித்து விசாரிக்கின்றனர்.
ரோந்துப் பணி தீவிரப்படுத்தப் பட்டதால், அழைப்பு வந்த இடத்துக்கு செல்வதற்கான கால அவகாசம் குறைந்துள்ளது. அதிகபட்சம் தகவல் கிடைத்த 11.35 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு போலீஸார் சென்று விசாரிக்கின்றனர்.
இதுவே, திருப்பூரில் 13 நிமிடம், சென்னை தெற்கு பகுதியில் 17 நிமிடம், சேலத்தில் 21 நிமிடம், நாமக்கல்லில் 24 நிமிடம் என்ற நிலையில் இருக்கிறது. ஆனால் கோவை மாநகரில் 11.35 நிமிடத்தில் செல்வதால் தமிழகத்தில் கோவை மாநகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.