

சென்னை: போதைப் பொருள் கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்து வருவதுபோல், குட்கா வியாயாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு காவல் துணை ஆணையர்கள், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் குட்கா வியாபாரிகளை கைது செய்வது குறித்தும், குட்கா வியாபாரத்தை முற்றிலும் தடுக்க கூட்டு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து 20 உணவு பாதுகாப்பு , சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் புனித தோமையர் மலை காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில், புனித தோமையர் மலை ஆயுதப்படை கலந்தாய்வுக் கூட்டத்தில், வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர்களிடம் குட்கா,மாவா போன்ற புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள்குறித்தும், இவற்றை விற்பனைசெய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்தும் விளக்கப்பட்டது.
குட்கா,மாவா விற்பனை குறித்த தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர்கள் 50 பேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீஸார் பங்கேற்றனர்.