

மதுரை: தாய், மகள் அளித்த பாலியல் புகாரை முறையாக விசாரிக்காமல் முடித்து வைத்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரிடம் சுரண்டையை சேர்ந்த பெண் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்தாத நிலையில் அந்தப் பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக நீலகண்டன் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன. இப்புகாரின் பேரில் நீலகண்டன் மீது போலீஸார் 2 வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நீலகண்டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
தென்காசி எஸ்பி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, மனுதாரருக்கு எதிராக ஏற்கெனவே 3 புகார்கள் அளிக்கப்பட்டு, விசாரணைக்கு பிறகு அந்த புகார்கள் முடிக்கப்பட்டுள்ளன எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீது ஏற்கெனவே 3 புகார்கள் அளிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதே காரணத்துக்காக மீண்டும் வழக்குப் பதிவு செய்தது சரியல்ல. எனவே 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
புகார் அளித்த பெண் நேரில் ஆஜராகி, அவருக்கும் மனுதாரருக்கும் இடையில் நடைபெற்ற வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரங்களை தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், என் மகனை 9.2.2023-ல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மனுதாரர் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என் மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். பின்னர் துப்பாக்கியை காட்டி இதை வெளியே யாரிடமாவது தெரிவித்தால் என்னையும், மகளையும் கொலை செய்வதாக மிரட்டினார்.
பயம் காரணமாக யாரிடமும் நான் கூறவில்லை. டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்றபோது மனுதாரர் அங்கிருந்தார். அவரை பார்த்ததும் மயங்கி விழுந்தேன். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது போலீஸாரிடம் மனுதாரரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக வாக்குமூலம் அளித்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல்நலக்குறைவால் என் மகன் இறந்து விட்டார் என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை. பாலியல் தொந்தரவுக்கு முகாந்திரம் இருக்கும் நிலையில், ஆதாரங்கள் இருக்கும் நிலையில் புகாரை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். இதற்காக விசாரணை அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு விசாரணை அதிகாரியின் கருத்தை கேட்க நீதிமன்றம் விரும்புகிறது. இதனால் மனுதாரர் வழக்கின் விசாரணை அதிகாரியான லட்சுமிபிரபா (தற்போது தூத்துக்குடி டிசிபி காவல் ஆய்வாளராக உள்ளார்) ஆக.25ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.