

சென்னை: மதுபோதையில் தினமும் தகராறு செய்த கணவரை, கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தில் வசித்து வந்தவர் காதர் பாஷா (42). இவரது மனைவி நிலவர் நிஷா (48). மதுபோதைக்கு அடிமையான காதர் பாஷா தினமும் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைப்பாராம். இதனால், நிஷா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு காதர் பாஷா மதுபோதையில் மனைவி நிஷாவிடம் வழக்கம் போல் தகராறு செய்து தாக்கிவிட்டு தூங்க சென்றார். தாக்குதலில் காயம் அடைந்த மனைவி கடும் ஆத்திரம் அடைந்தார். தினமும் தகராறு செய்து தாக்கி வரும் கணவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, எண்ணெய்யை பாத்திரம் ஒன்றில் கொதிக்க வைத்தார்.
நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவர் முகத்தில், அந்த கொதிக்கும் எண்ணையை ஊற்றி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத காதர் பாஷா வலியால் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விவகாரம் தொர்பாக, புழல் போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து மனைவி நிலவர் நிஷாவை கைது செய்தனர்.