

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்கு பர்தா அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அண்ணா சதுக்கம் காவல் நிலைய போலீஸார், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது பர்தா அணிந்த நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு நடந்து சென்றார். அவரைப் பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். மேலும், பர்தா அணிந்து வந்தவர் ஆண் என்பதும் தெரியவந்தது.
போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, அவர் சவுக்கார்பேட்டையைச் சேர்ந்த கரண் மேத்தா (24) என்பது தெரிந்தது. மேலும் சோதனையில் , அவருடைய பையில் 2 கொடுவாள் மற்றும் ஒரு கத்தி இருந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பிடிபட்ட கரண் மேத்தாவின் தந்தை உத்தம் சந்த் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளதும், தாயார் சாந்திதேவி மாற்றுத் திறனாளியாக உள்ளதும், சகோதரிக்கு திருமணமாகி ஐதராபாத்தில் வசித்து வருவதும் தெரிந்தது. மேலும், கரண் மேத்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவர், அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். இதற்கிடையே, கரண் மேத்தா அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.72 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையே, பங்குச் சந்தை முதலீடு, ஆன்லைன் சூதாட்டம் என ரூ.24 லட்சம் வரை இழந்துள்ளார். நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, மாதந்தோறும் தவணை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் மூலம் சிஏ படித்து வந்த கரண் மேத்தா, தேர்வுக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார். இந்தச் சூழலில், நேற்று ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ரூ.1 லட்சம் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதற்கு முன்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவரது பெண் தோழியைப் பார்த்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். இதற்காக வீட்டில் இருந்த கொடுவாள் மற்றும் கத்தியை பையில் வைத்துக்கொண்டு, பர்தா அணிந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துள்ளார்.
மேலும், “தோழியைப் பார்த்துவிட்டு, மரங்கள் நிறைந்த மறைவான இடத்துக்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகுதான் எனது உடலை எடுக்க போலீஸார் வருவார்கள். அதற்குள் அடையாளம் தெரியாத வகையில் முகம் அழுகி விடும். இதனால், முகத்தை அடையாளம் காண முடியாது. பர்தாவை வைத்து இறந்தது பெண் என்ற முடிவுக்கு போலீஸார் வருவார்கள். நான் இறந்த விபரம் என் தாயாருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்தேன்” என போலீஸாரிடம் கரண் மேத்தா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆள் மாறட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.