ஓசூரில் முகமூடி அணிந்து சுற்றிய மர்ம நபர்களால் மக்கள் அச்சம்!

ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் குடியிருப்பு பகுதியில் அண்மையில் இரவு நேரத்தில் டார்ச் லைட் அடித்தபடி வீடுகளை நோட்டமிட்டபடி சுற்றிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள்.
ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் குடியிருப்பு பகுதியில் அண்மையில் இரவு நேரத்தில் டார்ச் லைட் அடித்தபடி வீடுகளை நோட்டமிட்டபடி சுற்றிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள்.
Updated on
1 min read

ஓசூர்: தொழில் நகரான ஓசூர் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரி்ந்து வருகின்றனர்.

மேலும், பெங்களூரு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் ஓசூரில் வாடகை வீடுகளில் தங்கி தினசரி பெங்களூருக்குச் சென்று வருகின்றனர். இருமாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், குற்றங்களில் ஈடுபடுவோர் எளிதாக அண்டை மாநிலங்களுக்குத் தப்பிச் செல்கின்றனர். இதனால், குற்றங்களில் ஈடுபடுவோரைப் பிடிப்பது காவல் துறைக்குச் சவாலாக இருந்து வருகிறது.

எளிதான வெளிமாநில போக்குவரத்தைப் பயன்படுத்தி வடமாநில கொள்ளையர்கள் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வங்கி ஏடிஎம் மையங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதனால், வீட்டை பூட்டி விட்டு பணிக்குச் செல்வோர் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று திரும்பும் நிலையுள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து டார்ச் லைட்டுகளை அடித்தபடி வீடுகளை நோட்டமிடும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இக்காட்சி சமூக வலைதளத்தில் வைரலானதால், அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “ஓசூர் பகுதியில் அதிக அளவில் குற்றங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக ஆட்கள் இல்லாத வீடுகளைக் குறி வைத்து திருட்டு மற்றும் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது. மேலும், இருசக்கர வாகனங்கள் திருட்டும் நடந்து வருகிறது. தற்போது, மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் இரவில் முகமூடி அணிந்த மர்ப நபர்கள் நடமாட்டத்தால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, காவல் துறையினர் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in