

சென்னை: வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள் 3 பேரை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வீட்டுக்குள் வைத்து பூட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
சென்னை பெரியமேடு, பெரியன்னா மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 3-வது தளத்தில் வசித்து வருபவர் ரிஷிகேஷ் (23). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது, 3 பேர், ரிஷிகேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக, கொள்ளையர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பெரியமேடு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து வீட்டுக்குள் பூட்டப்பட்ட கொள்ளையர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பின்னர், அவர்களிடம் விசாரித்தபோது, பிடிபட்டது வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த சுவேல் (28), அதே பகுதியைச் சேர்ந்த அர்ஷான் அகமது (32), சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கஜேந்திரன் (32) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஜாக்கிராடு மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுவேல் மீது 13 திருட்டு வழக்குகள், வழிப்பறி, அடிதடி உட்பட மொத்தம் 22 குற்ற வழக்குகளும், அர்ஷான்அகமது மீது 2 கஞ்சா வழக்குகளும், கஜேந்திரன் மீது கஞ்சா, அடிதடி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.