

சென்னை: பிஹாரிலிருந்து சென்னைக்கு கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து, மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஜாம்பஜார் காவல் நிலைய போலீஸார் கடந்த 16-ம் தேதி ராயப்பேட்டை, பெரோஸ் தெருவில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த அமுல்குமார் யாதவ் (52) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1.142 கிலோ கிராம் எடையுள்ள 228 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்ட அமுல்குமார் யாதவ் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் பிஹாரிலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து, மாணவர்களை குறி வைத்து ஒரு சாக்லேட் ரூ.30 வீதம் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.