

சென்னை: சென்னையில் வேலைக்கு செல்லும் தம்பதி வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை காவல்துறை கைது செய்தது/
சென்னை மதுரவாயலில் வசித்து வருபவர் சுடர் கொடி (37). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த நகைளை சரிபார்த்த போது அவற்றில் சுமார் 7 பவுன் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் சுடர் கொடி வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சதிஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக இருந்த சதிஷ்குமாரை போலீஸார கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சதிஷ்குமார், அவரது நண்பருடன் சேர்ந்து சுடர் கொடி வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. மேலும், சுடர் கொடியும் அவரது கணவரும் வேலைக்கு செல்வதையும், அவர்கள் வீட்டு சாவியை வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைப்பதையும் நோட்டமிட்டு, சதிஷ்குமார் நகையை திருடியுள்ளார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் சுடர் கொடி அஜாக்கிரதையாக பீரோவை பூட்டாமல் சென்றதால் நகையை திருட சதிஷ்குமாருக்கு சாதகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதேபாணியில் சதிஷ் குமார் மொத்தம் 7 வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவாக உள்ள சதிஷ்குமாரின் கூட்டாளியை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சதிஷ் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.