

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பைக் மீது காரால் மோதியதில் கீழே விழுந்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
மேலூர் அருகே பூதமங்கலம் பொட்டபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். தும்பைப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ராகவிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவரின் பழக்கத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, போலீஸார் இரு தரப்பு வீட்டாரையும் அழைத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சமரசம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சித்தி வீட்டில் வைத்து தன்னை சித்திரவதை செய்வதாக சதீஷ்குமாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சதீஷ்குமார் மீணடும் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகார் தொடர்பாக, சதீஷ்குமார், அந்தப் பெண் மற்றும் இரு தரப்பு வீட்டாரையும் நேற்று முன்தினம் போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது, அந்தப் பெண் அவரது பெற்றோருடன் போக மறுத்ததால், சதீஷ்குமார் அவரை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றார்.
இரவில் அவர்கள் திருச்சி நோக்கிச் சென்றபோது மேலூர் அருகே அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. அதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கியது. தடுக்க முயன்ற அப்பெண்ணும் தாக்கப்பட்டார். இதன்பின் அங்கிருந்து அவர்கள் தப்பினர்.
தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, சதீஷ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கும், காயமடைந்த பெண்ணை மதுரை அரசு மருத்துவமனைக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெண் அளித்த புகாரில், ‘எங்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த எனது பெற்றோர், சகோதரர் ஆகியோர் அனுப்பிய நபர்களே காரால் மோதி கீழே தள்ளிவிட்டு, சதீஷ்குமாரின் பின்தலையில் தாக்கிக் கொன்றனர். தடுக்க முயன்ற என்னையும் தாக்கிவிட்டு தப்பினர். அவர்களை கைது செய்யவேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதனடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.