

சென்னை: கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி எழும்பூரில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். குளியலறை ஜன்னல் அருகே செல்போன் ஒன்று இருப்பதைக் கண்டு அதை எடுத்துப் பார்த்தார். அதில் அவர்
குளித்து கொண்டிருந்தது வீடியோவாக பதிவாகியிருந்தது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறினார். அந்த செல்போன் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் ராகேஷ்(52) என்பவருடையது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் பூக்கடை போலீஸார், சிறுமியின் வீட்டருகில் குடியிருந்துவரும் காவலாளியான ராகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது 2 மகன்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.