

புதுச்சேரி: பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பவன்குமார் (25), கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியைச் சேர்ந்த மேகா (29), கர்நாடகா ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த பிரெட்ஜ்வால் மேத்தி (23), குஜராத்தைச் சேர்ந்த அதிதீ (23), கர்நாடகத்தைச் சேர்ந்த ஜீவன் (23) உள்ளிட்ட நண்பர்கள் 12 பேர் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
இவர்கள் அரியாங்குப்பம் அருகே சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு நேற்று வந்த இவர்கள், கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையில் பவன்குமார், மேகா, பிரெட்ஜ்வால் மேத்தி,அதிதீ, ஜீவன் ஆகியோர் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட மற்றவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
உடனே அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அதிதீ, ஜீவன் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்ற 3 பேரின் உடல்களும் பின்னர் மீட்கப்பட் டன. அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதினைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.