

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தனது பெயர் சூர்யா என்றும் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வெடிகுண்டு வைத்து கொலை செய்யவுள்ளதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபர் யார் என துப்பு துலக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் அருகே இருந்து மிரட்டல் அழைப்பு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் அதே மாவட்டம், மையூரைச் சேர்ந்த கணேஷ் (46) என்பதை கண்டறிந்து அவரை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில், கணேஷ் 2 ஆண்டுகளாக சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வந்ததும், அதில் நஷ்டம் ஆனதால் தற்போது பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து செய்துவருவதும் தெரியவந்தது. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் மது அருந்திவிட்டு போதையில் அவரது மகன் சூர்யா பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டை போனில் போட்டு, மகன் சூர்யா பெயரிலேயே முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, கணேஷை போலீஸார் கைது செய்தனர்.