

நெல்லை: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் கொலை செய்யப்பட்டார். இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும், 2 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கொலை நடைபெற்ற கேடிசி நகர் பகுதிக்கு சுர்ஜித்தை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சரவணன், சுர்ஜித் ஆகியோரை உடல் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் என்பவரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.