

நாமக்கல்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொல்லிமலை வாழவந்திநாடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை நாமக்கல் காவல் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன் (54). இவர் கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாரளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்லிமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு கடந்த 6-ம் தேதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் வேதப்பிறவி, கொல்லிமலை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.