

சென்னை: விடுதியில் மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தை கீழே கிடந்ததாக போலீஸில் ஒப்படைத்து காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குகையில் கட்டைப்பையுடன் இளைஞர் ஒருவர் நேற்று முன் தினம் மதியம் வந்தார். அந்த கட்டைப்பையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் அவர் கொடுத்தார். அதை வாங்கி பார்த்த போலீஸார், கட்டைப்பையில் பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, அந்த இளைஞர், ‘நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். கட்டைப்பையில் வைத்தவாறு இந்த குழந்தை கீழே கிடந்தது,’ என தெரிவித்தார். இதையடுத்து போலீஸார், அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்தில் கிடந்தது? எப்போது பார்த்தீர்கள்? என கேள்விகளை எழுப்ப, இளைஞர் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்து வந்தார்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸார், கிடுக்கிப்பிடியாக பிடித்து அந்த இளைஞரை விசாரிக்க, அவர், ‘மன்னித்துவிடுங்கள். இந்த குழந்தை எனக்கு பிறந்தது தான். உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்,’ என கூறி கதறி அழுதார்.
இளைஞரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: குழந்தையை கொண்டு வந்த இளைஞர் பெயர் பிரவீன்(21). ஊட்டியில் உள்ள கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த 21 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் பிரவீன் அரசு வேலைக்காக சென்னை சைதாப்பேட்டையில் தங்கி படித்து வருகிறார்.
மாணவி, கிண்டியில் உள்ள விடுதியில் தங்கி சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சென்னையில் இருந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதனால், மாணவி கர்ப்பமடைந்தார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி விடுதியில் இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மாணவியின் தோழிகள் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதால், விடுதி கழிவறையிலேயே மாணவி குழந்தையை பெற்றெடுத்தார்.
இதுகுறித்து தனது காதலன் பிரவீனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், இருவரும் திருவல்லிக்கேணி லாட்ஜில் அறையெடுத்து தங்கினர். அப்போது, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், அவமானமாகி விடும். இருவருக்கும் வேலையும் இல்லை. எனவே, குழந்தை கீழே கிடந்ததாக கூறி போலீஸில் ஒப்படைத்துவிடுவோம் என முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கட்டைப்பையில் குழந்தையை எடுத்து கொண்டு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரும் போது பிரவீன் சிக்கிக் கொண்டார். தற்போது குழந்தையும், மாணவியும் கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.