

புதுச்சேரி: வார இறுதி நாட்களில் விதிமீறி புதுச்சேரியில் ரெஸ்டோபார்கள் அதிகாலை வரை இயங்கி வருவதால் குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது. மக்கள் புகார் தந்தும் அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது.
புதுவையில் சுற்றுலாவை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள்உள்ளன. பொதுவாக திங்கள் முதல் வியாழன் வரை ரெஸ்டோ பார்களில் கூட்டம் கூடுவதில்லை. ஏனெனில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மது குடிக்க ரெஸ்டோ பார்களுக்கு செல்வதில்லை.
அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ரெஸ்டோ பார்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும். அதிலும் இளைஞர், இளம் பெண்கள் அதிக அளவில் ஒன்று கூடுவர். இவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தவர்கள்தான்.
ரெஸ்டோ பார்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவில் போராட்டம் நடத்தும் நிலை உள்ளது. கோயில்கள், குடியிருப்புகள் அருகில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது..
ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கொண்டாட்டங்கள் அதிகாலை வரை நடக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் மதியத்திற்கு மேல் புறப்பட்டு செல்வர்.
இதனால் சனிக்கிழமைகளில் அதிகாலை 4 மணி வரை ரெஸ்டோ பார்களில் கொண்டாட்டம் தொடர்கிறது. இதற்கு பார்களில் உள்ளோர் வெளியேற மறுத்து மீண்டும், மீண்டும் டிஜெவிடம் குத்துப் பாடல்களை போடும்படி வற்புறுத்தி ஆட்டம் போடுவதே காரணம் என்கின்றனர். நேரத்தை அதிகரித்தாலும் உரிய நடவடிக்கையை துறைகள் எடுக்காததும் ஓர் காரணம்.
ரெஸ்டோபார்கள் அருகே வசிப்போர், அங்கு இரவு முழுக்க எழும் அதிக சத்தத்தால் தங்களால் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை என்ற புகார்கள் தெரிவித்தும் உள்ளனர். பல இடங்களில் மது அருந்தியோர் சாலைகளில் தகராறில் ஈடுபடுவதும் நடக்கிறது.
தொடரும் குற்ற சம்பவங்கள்: ரெஸ்டோபார்களில் குற்றச் சம்பவங்கள் நடப்பதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது. நிர்ணயித்த நேரத்தை தாண்டியும் பார்கள் இயங்குவது, நள்ளிரவில் போதையில் வெளியேறுபவர்கள் பார் வாசலில் உருள்வது, போதையில் கார்களை தாறுமாறாக இயக்குவது என பல சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில மாதம் முன்பு முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு ரெஸ்டோபாரில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்தவர்கள் காரை ஏற்றி பவுன்சரை கொலை செயய முய்ற்சித்த சம்பவம் நடந்தது. அதிக சத்தத்துடன் பாடல்கள் இசைக்கப்படுவதால் பல பகுதிகளில் மக்கள் புகார் தருவதும் தொடர்கிறது. தற்போது ரெஸ்டோபாரில் கல்லூரி மாணவர் கொலையானது வரை நடந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கடந்த புத்தாண்டில் வாகன நிறுத்தம் தொடர்பாக பேனர்களை போலீஸார் வைத்தனர். அதில் ரெஸ்டோபார் ஸ்பான்சர் செய்து விளம்பரமும் இடம் பெற்றது. இதுபற்றி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதுபோல் அரசு நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்காததும் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க ஓர் காரணம். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகையால் அதிக போக்குவரத்து நெரிசல் சாலையோரம் நிறுத்தப்படும் கார்களால் அதிகம் ஏற்படுகிறது. அதைக்கூட போலீஸார் அகற்றுவதில்லை" என்றனர்.