புதுச்சேரி ரெஸ்டோபாரில் சென்னை கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய பவுன்சர்: ஒருவர் பலி

புதுச்சேரி ரெஸ்டோபாரில் சென்னை கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய பவுன்சர்: ஒருவர் பலி
Updated on
1 min read

புதுச்சேரி: பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வந்திருந்த சென்னை கல்லூரி மாணவர்கள் அதிகாலையில் வெளியேற மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் இரு மாணவர்களை பவுன்சர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

புதுச்சேரியில் மது அருந்தி, இசைக்கு ஏற்பட நடனம் ஆடும் ரெஸ்டோபார்கள் அதிகளவில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து திறக்கப்பட்டுள்ளன. இதற்காக வார விடுமுறை நாட்களில் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் அதிகளவில் வருகின்றனர். ரெஸ்டோபார்களால் கடும் பாதிப்பு உள்ளூர் மக்களுக்கு ஏற்படுவதால் கடும் எதிர்ப்பும் உள்ளது.

இச்சூழலில் சென்னையிலுள்ள முக்கிய தனியார் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி வந்து, மிஷன்வீதி முத்துமாரியம்மன் கோயில் வீதியிலுள்ள ரெஸ்டோபாருக்கு வந்தனர். மது அருந்தி நடனமாடியுள்ளனர். இன்று அதிகாலை ரெஸ்டோபார் உரிமையாளர் ராஜ்குமார் அவர்களை வெளியேற கூறினார். இதில் ஏற்பட்ட தகராறு முற்றி அவரை கல்லுாரி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரெஸ்டோபார் பவுன்சர் கேப்டன் அசோக் தலைமையிலான பவுன்சர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.. அப்போது பவுன்சிலர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த பவுன்சர் கேப்டன் அசோக் கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து 2 மாணவர்களை குத்தியதாக தெரிகிறது.

இதில் கல்லுாரி மாணவர்கள் சிவகங்கை மோஷிக் சண்முக பிரியன் (வயது 21), மதுரை மேலூர் சாஜன் (21) ஆகியோர் மயங்கி விழுந்தனர். அதைத்தொடர்ந்து பெரியகடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு வந்து குத்துப்பட்ட மாணவர்களை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, மாணவர் மோஷிக் சண்முகபிரிய்ன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மற்றொரு மாணவர் சாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை டிஐஜி சத்தியசுந்தரம் தலைமையில் போலீஸ் எஸ்பி இஷாங், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் ரெஸ்டோபாரை பார்வையிட்டார். பின்னர் சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ரெஸ்டோ பார் உரிமையாளர், 5 பவுன்சர்கள், கல்லுாரி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in