

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன். இவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. நேற்று தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்தபோது மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கீழகோதைநாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (18), விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (55) என்பவர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. காயமடைந்த மாரியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் பொன்னுபாண்டியனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தசெய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.