

சென்னை: சென்னை கே.கே. நகர் அடுத்த நெசப்பாக்கத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் ஒருவர் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு, அசோக் நகரில் வசித்து வரும் தச்சுத் தொழிலாளியான 21 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். சில தினங்களாக சட்டக் கல்லூரி மாணவி, போனில் அழைத்தும் அவரது காதலன் பேச மறுத்துள்ளார். இதனால் இளம் பெண் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கே.கே.நகர், ஏபி பத்ரோ சாலை வழியாக அந்த இளைஞர் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இதையறிந்த காதலி தனது 19 வயது தங்கையுடன் அங்கு சென்று, பேசாதது குறித்து கேட்டுள்ளார்.
இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காதலி அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து காதலனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், நிலை குலைந்த காதலன் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து இளம் பெண் தங்கையுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
வைரலான வீடியோ... பலத்த காயமடைந்த இளைஞரை அவரது தாயார் மீட்டு கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், காதலனை காதலி விரட்டி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.