

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பைக் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நாகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கராசு மகன் தினேஷ் (25), அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன் (26), பழனிசாமி மகன் சிவசக்தி (25). தினேஷ் பஞ்சர் கடை நடத்தி வந்தார். வெங்கடேசன், சிவசக்தி ஆகியோர் லாரி ஓட்டுநர்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூவரும் பைக்கில் சின்னசேலம் புறவழிச்சாலை வழியாக அம்மையகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சின்னசேலம் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, அவ்வழியே வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் தினேஷ், வெங்கடேசன், சிவசக்தி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த சின்னசேலம் போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.