பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி கைது

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி கைது
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி பொருளாளர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அடுத்த காணை கிராமம் மாதா கோயில் தெருவில் வசிப்பவர் அப்துல் ஹக்கீம் ( 51). மனிம நேய மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி பொருளாளராக உள்ளார். இவர் விழுப்புரம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் பிரபல உணவகம் பின்புறம் உள்ள தென்றல் நகரில் உர நிறுவனம் நடத்தி வருகிறார்.

மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் பணி செய்யும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பெண் ஊழியர்களின் கைபேசியில் ஆபாச குறுந்தகவல் அனுப்புவது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இதில் 9 பெண் ஊழியர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அவரது நிறுவனத்தில் டெலி காலிங் பிரிவில் பணியாற்றிய 22 வயது எம்பிஏ பட்டதாரி பெண்ணை நேற்று தனது அறைக்கு அழைத்த அப்துல் ஹக்கீம், அலுவலக அறையில் இருந்த தொலைபேசியில் நிறுவனத்தின் பொருட்கள் தொடர்பாக ஒருவர் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் பெண் ஊழியரும் தொலைபேசியில் மறுமுனையில் இருந்தவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவருக்கு அப்துல் ஹக்கீம் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் அதிர்ச்சிடைந்த பெண் ஊழியர் அலறியடித்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறினாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்று அப்துல் ஹக்கீமை கைது செய்து வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பணிபுரியும் இடங்களில் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெண்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் காவல் உதவி செயலியிலும் தயக்கமின்றி புகார் அளிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in