

சென்னை: தந்தை கொலைக்கு 17 ஆண்டுகள் காத்திருந்து கல்லூரி மாணவனான மகன் பழி தீர்த்துள்ளார். இக்கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை டி.பி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் புல்கான் என்ற ராஜ்குமார் (42). இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு ஷாமியானா பந்தல் அமைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். ‘பி’ வகைப்படுத்தப்பட்ட ரவுடியான இவர் மீது ஒரு கொலை உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது கொலை கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக டி.பி.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில், பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் 50 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெண் தாதா கிருஷ்ணவேனியின் வளர்ப்பு மகன் எனக் கூறப்படும் செந்திலை கடந்த 2008-ல் கும்பல் ஒன்று கொலை செய்தது.
இந்த வழக்கில் ரவுடி தீச்சட்டி முருகன், ஜெயராஜ், பைனான்சியர் ஆறுமுகம், பிரான்சிஸ், குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகியோர் தொடர்புடையவர்கள். இதில் தீச்சட்டி முருகன், ஜெயராஜ், பைனான்சியர் ஆறுமுகம் ஆகியோர் வெவ்வேறு சம்பவங்களில் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். பிரான்சிஸ் சில ஆண்டுகளுக்குமுன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். செந்தில் கொலை வழக்கில் தொடர்புடைய குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகிய இருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
கல்லூரி மாணவர்: இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த சண்டை சச்சரவுக்கும் செல்லாமல் ராஜ்குமார் இருந்துள்ளார். அதிமுக கட்சியிலும் பொறுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2008-ல் செந்தில் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
செந்தில் கொலை செய்யப்பட்டபோது அவரது மகன் யுவனேஷ் (தற்போது 19 வயது) 2 வயது சிறுவனாக இருந்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தந்தையை கொன்றவர்களில் எஞ்சியிருப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் இருந்துள்ளது.
சமீபத்தில் ``உன் தந்தை கதையை நான்தான் முடித்தேன். வாலை சுருட்டிக் கொண்டு இருக்கணும். இல்லையென்றால் உன் தந்தையை எப்படி வழியனுப்பி வைத்தோமோ அதே நிலைதான் உனக்கும்'' என யுவனேசை பார்த்து ரவுடி ராஜ்குமார் மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே தந்தையை கொன்றவரை பழி தீர்க்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்த யுவனேஸுக்கு ராஜ்குமாரின் மிரட்டல் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் வெளி ஆட்கள் என மொத்தம் 9 பேருடன் சென்று, அதில் 5 பேர் ராஜ்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக யுவனேஸ் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யுவனேஸ் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். செந்திலின் கொலைக்கு பழிக்குப் பழியாக ராஜ்குமார் கொல்லப்பட்டாரா? அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் ராஜ்குமாரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கொலை திட்டத்தை செந்தில் மகனை வைத்து அரங்கேற்றினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.