

கும்பகோணம்: திருவிடைமருதூர் டிஎஸ்பி தாக்கியதில் காதுகள் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டம் சிவபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேலு(40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். அங்குள்ள மாரியம்மன் கோயில் தேர் நிறுத்தும் இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டி வந்தார்.
அதற்கு குமரவேலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், நாச்சியார்கோவில் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து, வீடு கட்டும் நபர் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜுவிடம் இந்தப் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். பின்னர், கடந்த 3-ம் தேதி வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்கினார். அதை குமரவேலு செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த டிஎஸ்பி ராஜு, குமரவேலுவை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது கன்னத்தில் அறைந்ததுடன், செல் போனை பறித்துக்கொண்டு, நாச்சியார்கோவில் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், இரவில் அவரை போலீஸார் விடுவித்துள்ளனர்.
இதற்கிடையே, குமரவேலு தன்னிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.300 பறிக்க முயன்றதாக, வீடுகட்டி வந்த நபர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டிஎஸ்பி அறைந்ததால் குமரவேலுவுக்கு காதுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணம் பறித்ததாக புகார் கொடுத்ததாலும், பொதுமக்கள் முன்னிலையில் டிஎஸ்பி தாக்கியதாலும் அவமானமடைந்த குமரவேலு நேற்று முன்தினம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த, நண்பர்கள், உறவினர்கள் குமரவேலுவை மீட்டு, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குமரவேலு மனைவி மாரியம்மாள், தஞ்சாவூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து டிஎஸ்பி ராஜுவிடம் கேட்டபோது, “நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி கூறுகிறார்கள். இந்த விவகாரத்தை சமூகப் பிரச்சினையாக கொண்டு செல்கின்றனர். நான் அவரை அடிக்கவில்லை” என்றார்.