

உடுமலை / திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் நேற்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மூர்த்தி(62), அவரது மகன் தங்கபாண்டி(30) மற்றும் குடும்பத்தினர் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். கடந்த 5-ம் தேதி இரவு மூர்த்தியை பார்க்க அவரது மற்றொரு மகன் மணிகண்டன்(32), தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது மூர்த்தி, மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். திடீரென அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்ட மேலாளர் அளித்த தகவலின் பேரில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல்(58), காவலர் அழகுராஜா(32) ஆகியோர் சிக்கனூத்தில் உள்ள தோட்டத்துக்கு நள்ளிரவு சென்றனர். மூவரிடமும் விசாரித்து விட்டு, மகன்கள் தாக்கியதில் காயமடைந்த மூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எஸ்எஸ்ஐ சண்முகவேல் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் உள்ளிட்ட மூவரும் அரிவாளால் எஸ்எஸ்ஐ சண்முகவேலை தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற காவலர் அழகுராஜா மற்றும் தோட்ட மேலாளர் ஆகியோரையும் தாக்கினர். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக காவலர் அழகுராஜா அளித்த தகவலின்பேரில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், எஸ்.பி. கிரிஸ் யாதவ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதற்கிடையில், தலைமறைவாக இருந்த மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர், முக்கிய குற்றவாளி மணிகண்டன் போலீஸாரிடம் சிக்கினார். இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேலை கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காண்பிப்பதாக மணிகண்டன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தம், உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் போலீஸார், சிக்கனூத்துக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உப்பாறு ஓடை பகுதிக்கு நேற்று அதிகாலை மணிகண்டனை அழைத்துச் சென்றனர். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த மணிகண்டன், எதிர்பாராதவிதமாக எஸ்.ஐ. சரவணகுமாரை வெட்டியுள்ளார். மற்ற போலீஸாரையும் வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது தற்காப்புக்காக ஆய்வாளர் திருஞானசம்பந்தம் தனது துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த எஸ்.ஐ. சரவணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மணிகண்டன் மீது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், எஸ்.பி. கிரிஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் உடுமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.