

செங்குன்றம்: ஒடிசாவில் இருந்து கடத்திவரப்பட்ட 1,300 போதை மாத்திரைகள், 15 கிலோ கஞ்சாவை நேற்று செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே போலீஸார் பறிதல் செய்தனர். இதுதொடர்பாக இரு இளைஞர்களை கைது செய்தனர்.
ஆவடி காவல் ஆணைரயகத்தின் கீழ் உள்ள செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் நேற்று மீஞ்சூர், செங்குன்றம், அத்திப்பட்டு, எண்ணூர் மற்றும் மணலி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அச்சோதனையில், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, மீஞ்சூர் அடுத்த மெரட்டூரை சேர்ந்த அஜய் (25), செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்த விஷ்வா (20) ஆகிய இருவர், தாங்கள் வைத்திருந்த பைகளில் 1,500 போதை மாத்திரைகள் மற்றும் 15 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், அவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதும்’ தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த செங்குன்றம் மதுவிலக்கு அமலாகப்பிரிவு போலீஸார், அஜய், விஷ்வா ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதானவர்களை போலீஸார், பொன்னேரி குற்றவியல் நடுவர்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.