

சென்னை: ராயபுரத்தில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் மோசடி செய்ததாக, தம்பதியர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார் (57). ராயபுரம் ஆடு தொட்டி பகுதியில் நகை அடமானக் கடை நடத்தி வருகிறார். இவர் ராயபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘ராயபுரம் ஆஞ்சநேயர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த சீனிவாசலு (60), அவர் மனைவி அம்சலட்சுமி (57) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி 196 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்சம் கடன் பெற்றனர்.
ஆபாசமாக பேசி மிரட்டல்: சில தினங்களுக்கு பின்னர் அவர்கள் கொடுத்த தங்க நகையை சோதனைக்கு உட்படுத்தியபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் 6 மாதங்களில் கடன் தொகையை திருப்பித் தந்துவிடுவதாக, ரூ.100 பத்திரத்தில் எழுதித் தந்தனர். 6 மாதம் கடந்த நிலையில், அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை.
பணத்தை நான் கேட்டபோது, என்னை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சீனிவாசலுவும், அவரது மனைவி அம்சலட்சுமியும் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.