

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலுள்ள தனியார் பள்ளி செயலராக வழக்கறிஞர் கந்தசாமி என்பவர் உள்ளார். இவரது கார் ஓட்டுநரான மணிக்குமார் என்பவர் அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற மணிக்குமார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது தாயாரும் பள்ளி நிர்வாகத்திடம் நேரடியாக முறையிட்டுள்ளனர். ஆனால், அவர்களை மிரட்டி, அந்த மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை கொடுத்து பள்ளியிலிருந்து அனுப்பியுள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது: இது பற்றி தெரியவந்ததும் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களும், பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரித்து, போக்சோ சட்டத்தில் மணிக் குமாரை கைது செய்தனர். ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் விசிக, புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம், பாஜக, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுடன் டிஎஸ்பிக்கள் சதீஷ்குமார், சம்பத் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியரும், செயலாளரும் ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கடும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவியின் மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி உள்ளனர்.
அத்துடன் புகார் அளிக்க சென்ற தாயாரும் அவர்களால் மிரட்டப்பட்டுள்ளார். ஓட்டுநரை தண்டிப்பதற்கு பதிலாக மாணவியை வேறு பள்ளிக்கு மாற்றியது ஏற்புடையதல்ல. புகார் அளிக்கப்பட்டுள்ள அனைவர்மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.