

5 கொலை உட்பட 22 குற்ற வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி காதுகுத்து ரவி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையை கலக்கி வந்தவர் பிரபல ரவுடி ரவி என்ற காதுகுத்து ரவி (56). 1991-ம் ஆண்டு முதல் 5 கொலை, 5 கொலை முயற்சி உட்பட 22-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது. போலீஸார் இவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், நீலாங்கரை போலீஸார் வழக்கம் போல் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் தங்கி உள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நீலாங்கரை போலீஸார் சம்பந்தப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த போது, அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓட முயன்றார்.
போதைப் பொருள் பறிமுதல்: இதையடுத்து, அவரை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டது பிரபல ரவுடியான காதுகுத்து ரவி என்பது தெரிந்தது. முன்னதாக, அவரது அறையை சோதனை செய்த போது, அங்கு மெத்தம் பெட்டமைன் வகை போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருள் வழக்கில் அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.