

அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவர் மகேஷ் டி.தர்மாதிகாரி (57). இவர், அண்ணாநகர் ஜெ பிளாக் 16-வது பிரதான சாலையில் உள்ள சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த மாதம்தான் சென்னை மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.
மகேஷின் குடும்பத்தினர் மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் நிலையில், இவர் மட்டும் அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவரை அழைத்துச் செல்வதற்காக அந்த பள்ளி ஊழியர் தண்டாயுத பாணி என்பவர் நேற்று காலை மகேஷ் வீட்டுக்குச் சென்றார்.
நீண்ட நேரம் கதவைத் தட்டியும் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த தண்டாயுதபாணி இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, திருமங்கலம் போலீஸார் விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகேஷ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மகேஷ் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.