

சிவகங்கை: திமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதானவரின் தந்தையை மர்ம கும்பல் தேவகோட்டை அருகே வெட்டிக் கொலை செய்தது.
சிவகங்கை அருகேயுள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். கடந்த ஏப். 27-ம் தேதி தோட்டத்தில் இருந்த அவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, தனது நண்பர்களான சிவகங்கை காளவாசல் பிரபாகரன், திருப்பத்தூர் நரசிங்கபுரம் குரு ஆகியோருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, சாமியார்பட்டியை விட்டு வெளியேறிய விக்கியின் தந்தை கருப்பையா(60), தனது மனைவி விமலாவுடன் தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்த கருப்பையாவை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. தகவலறிந்து வந்த போலீஸார், கருப்பையா சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தேவகோட்டை டிஎஸ்பி கவுதம் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.