கன்னியாகுமரியில் போலீஸ் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் போலீஸ் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கருங்கல் அருகே போலீஸார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் மூதாட்டியின் உடல், நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ பதிவுடன் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு பகுதியைச் சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் சாகித் ஜெட்லி(20). இவரை சைபர் கிரைம் வழக்கு ஒன்றில் கைது செய்ய அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அப்போது, அவரது பாட்டி சூசைமரியாள் (80) என்பவர் போலீஸாரை தடுத்ததாகவும், அந்நேரத்தில் போலீஸார் தள்ளிவிட்டதில் சூசைமரியாள் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மூதாட்டி உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாம் தமிிழர் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் தரப்பில், சைபர் குற்றவாளியை தப்புவிக்க மூதாட்டியின் உறவினர்கள் நாடகமாடுவதாகவும், அதுபோன்ற சம்பவம். நடைபெறவில்லை எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து, மூதாட்டியின் உடல் கடந்த 3 நாட்களாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டு உள்ளது. போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், மூதாட்டியின் உடலை, நீதிபதி தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று, சூசைமரியாளின் உறவினர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தனர்.

‘மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது மூதாட்டியின் உறவினர்கள் தரப்பில் ஒரு மருத்துவரும், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினரும் இணைந்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவற்றை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்’ என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இன்று காலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் சூசை மரியாளின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in