

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பாட்டியுடன் 17 வயது சிறுமி வசித்து வந்தார். சிறுமி மன நலம் குன்றியவர். கடந்த 2019-ம் ஆண்டு உடல்நில பாதிக்கப்பட்ட சிறுமியை, மருத்துவ பரிசோதனைக்கு பாட்டி அழைத்துச் சென்றார். அப்போது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாட்டி புகார் அளித்தார்.
விசாரணையில், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் முத்துக்குமார் என்பவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முத்துக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செந்தில் குமார் நேற்று தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முத்துக்குமார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.