

தூத்துக்குடி: சிபிஐ அதிகாரி என்று கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை மர்ம நபர்கள் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு, தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். பின்னர், “உங்கள் ஆதார் கார்டு அடிப்படையில் மும்பையில் வங்கிக் கணக்கு உள்ளது.
அதில், மனித கடத்தல் வழக்கில் ரூ.2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடர்பாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் தரவேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மூதாட்டி, ரூ.50 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மூதாட்டி, தேசிய குற்றப்பதிவு இணையதளத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி சகாய ஜோஸ் மேற்பார்வையில், ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடியில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளி பரமேஸ்வர ராவ் (28), சுகந்திபதி சந்திரசேகர் (40), ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத் (43) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீஸார் ஆந்திரா சென்று 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், வங்கிக் கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புகார் அளிக்க... சிபிஜ, காவல் துறை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மக்கள் இதுபோன்ற அழைப்பை துண்டித்து விடவேண்டும். மேலும், சைபர் குற்றப் பிரிவுக்கு 1930 என்ற கட்டணமில்லா எண் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.