இரிடியம் முதலீட்டில் லாபம் தருவதாக ரூ.92 லட்சம் மோசடி: மும்பை தொழிலதிபர் கைது

கைது செய்யப்பட்ட பீர் முகமது பாதுஷா
கைது செய்யப்பட்ட பீர் முகமது பாதுஷா
Updated on
1 min read

சென்னை: இரிடியம் தொழிலில் முதலீடு செய்தால் மூன்று மடங்கு லாபம் தருவதாக கூறி, ரூ.92 லட்சம் மோசடி செய்த மும்பை தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மடிப்பாக்கம், ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (52). சென்னை சூளையில் வெள்ளிப் பாத்திரங்கள் தயார் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு அன்மையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பீர் முகமது பாதுஷா (47) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. பீர் முகமது பாதுஷா தான் தொழில் அதிபர் என்றும், இரிடியம் தொழிலிலும் ஈடுபட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், முன்று மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய தட்சிணாமூர்த்தி 2017 முதல் 2024 வரை சிறுக சிறுக என மொத்தம் ரூ.92 லட்சம் பணத்தை பீர் முகமது பாதுஷாவிடம் கொடுத்துள்ளார். ஆனால், பாதுஷா கூறியது போல் பணம் தட்சிணாமூர்த்தியின் வங்கி கணக்கில் ரூ.5 கோடி வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து, தட்சிணாமூர்த்தி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால், பீர் முகமது பாதுஷா பணத்தை திருப்பிக் கொடுக்காமல கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பீர் முகமது பாதுஷா இரிடியத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தை சட்டபூர்வமாக டிரஸ்ட் மூலம் பெற்று அதிக லாபம் தருவதாகக் கூறியும், புகார்தாரரின் குடும்பத்தினரை மும்பைக்கு வரவழைத்து விருது (ஷீல்டு) கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தியும் சிறுக சிறுக பணம் ரூ.92 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பீர் முகமது பாதுஷாவை கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in