

சென்னை: பள்ளி மாணவி காதல் விவகாரத்தில் நண்பருக்கு ஆதரவாக வந்த கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டியதாக கூறப்படும் திமுக கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரினின் பேரன் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நிதின்சாய் (21). கல்லூரி மாணவர். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் தனது நண்பரான கல்லூரி மாணவர் அபிஷேக் (20) உடன் திருமங்கலம் பள்ளி சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அபிஷேக் ஓட்டி சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நிதின்சாய் தூக்கி வீசப்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயங்களுடன்உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணையில் நடந்தது விபத்து அல்ல. திட்டமிட்ட கொலை என தெரியவந்தது. பள்ளி மாணவியை காதலிப்பது சம்பந்தமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைதான் கொலைக்கான காரணம் என்பது தெரியவந்தது.
நிதின்சாயின் நண்பரான வெங்கடேசன் என்பவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால், இதை விரும்பாத அந்த பெண் இதுபற்றி தனது ஆண் நண்பரான பிரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து வெங்கடேசனை போனில் பிரணவ் திட்டியுள்ளார். இந்தச் சூழலில் நிதின்சாய், அபிஷேக் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மற்றொரு நண்பரான மோகனின் பிறந்த நாளை கொண்டாட திருமங்கலத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துள்ளனர். இதையறிந்த பிரணவ் தனது கூட்டாளிகளுடன் சொகுசு காரில் வந்து, மாணவி காதல் விவகாரம் தொடர்பாக பேசும்போது மோதல் ஏற்பட்டது.
இதில் காரில் வந்தவர்கள் வெங்கடேசன் மீது திடீரென காரை ஏற்றியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வெங்க டேசன் தரப்பினர் கார் கண்ணாடியை உடைத்ததுடன், நம்பர் பிளேட்டையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் நிதின்சாயும் அபிஷேக்கும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு அதிவேகமாக வந்த அதே சொகுசு கார் திடீரென அபிஷேக், நிதின்சாய் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிதின்சாய் இறந்துள்ளார். இதைதொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருமங்கலம் சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் காரை ஒட்டி இளைஞரைக் கொன்றது திமுக கவுன்சிலரும் மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு என நிதின்சாய் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அந்த நபர் காரில் வந்து பஞ்சாயத்து பேசிய போதுதான் மோதல் ஏற்பட்டதாக நிதின்சாயின் நண்பர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சந்துரு தற்போது தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரணவ் அவரது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனிடமும் விசாரிக்கப்படுகிறது. காயம் அடைந்த அபிஷேக் கார் ஏற்றியது குறித்து போலீஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.