ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கோவில்பட்டி நகராட்சி பெண் ஊழியர் கைது

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கோவில்பட்டி நகராட்சி பெண் ஊழியர் கைது
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சியில் வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஊருணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன், மகள் பெயருக்கு சொத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதி தந்துள்ளார். இதையடுத்து காளீஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்ய அவரது கணவர் செல்வகுமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் நவீனா (29) என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று பிற்பகல் நகராட்சி அலுவலகக்கு சென்ற செல்வகுமார், வருவாய் பிரிவு அறையில் இருந்த பில் கலெக்டர் நவீனாவிடம் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.

நவீனா பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை, ஆய்வாளர் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளர் தளவாய் மற்றும் போலீஸார் அவரை பிடித்தனர். இதையடுத்து நவீனா கண்ணீர் விட்டு அழுதார். விசாரணைக்கு பின்னர் போலீஸார் நவீனாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in