

சென்னை: கைது செய்யப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பில் பாஜக நிர்வாகிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டப்பட்டதும் அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மாநிலம் அன்னமயம் மாவட்டம், கடப்பா அருகே உள்ள ராயச்சோட்டில் கடந்த 1-ம் தேதி தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து லேப்-டாப் உட்பட ஏராளமான மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வீட்டில் சோதனை நடத்தியபோது வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை பழைய காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 5 இடங்களில் குண்டு வைத்தது என ஒன்றோடு ஒன்று தொடர்புடைய 7 வழக்குகளில் அபுபக்கர் சித்திக் சம்பந்தப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக, அவரிடம் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு பாஜக மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்த அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அபுபக்கர் சித்திக் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதுதொடர்பாக, தற்போது 5 நாட்கள் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து அபுபக்கர் சித்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஆந்திராவில் அவர் வசித்த வீட்டுக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சில முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தது. பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது மதுரை திருமங்கலம் ஆலம்பட்டி பாலத்தின் கீழே பைப் வெடிகுண்டு வைத்தது, நாகை மாவட்ட இந்து முன்னணி தலைவரின் மனைவியை வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொலை செய்தது, பாஜக முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியது என மேலும் சில வழக்குகளிலும் அபுபக்கர் சித்திக்குக்கு தொடர்பு இருப்பது தொியவந்தது.
அது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அபுபக்கர் சித்திக்கின் லேப்-டாப்பை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தற்போதைய தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் என தமிழக பாஜகவை சேர்ந்த 4 பேரின் புகைப்படங்களுடன் அவர்களை பற்றிய தகவல்களும் லேப்-டாப்பில் இருந்துள்ளன. மேலும், சிலரது புகைப்படங்களும் இருந்துள்ளது.
இதுபற்றியும் அபுபக்கர் சித்திக்கிடம் போலீஸார் விசாரித்தனர். தற்போது அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம், பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
இன்று (28-ம் தேதி) விசாரணை முடிவுற உள்ள நிலையில் அபுபக்கர் சித்திக் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.