

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் முறையாக இதுவரைக்கும் பொறுப்புகள் அறிவிக்கப்படவில்லை. இதில், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி தொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த சுமங்கலி ராஜா என்பவர் தலைமையிலான அணியினருக்கும், சுரேஷ் என்பவர் தலைமையிலான அணியினருக்கும் இடையே போட்டி இருந்து வந்தது.
இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வார்த்தை போர் நடத்தினர். இந்த நிலையில் சுமங்கிலி ராஜா அணியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சுரேஷ் பற்றியும், சுரேஷ் மீது உள்ள வழக்குகள் பற்றியும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வாக்குவாதம் உருவாகி மோதிக் கொண்டனர். இதில் சுமங்கலி ராஜா உட்பட 3 பேரும், சுரேஷ் உட்பட 3 பேரும் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி சுமங்கலி ராஜா அளித்த புகாரின் பேரில் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி சத்யா சுரேஷ் மற்றும் சதீஷ்குமார், கணேஷ், செந்தில், வேலாயுத புரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் ஆகிய 6 பேர் மீதும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில் செக்கடி தெருவைச் சேர்ந்த சுமங்கலி ராஜா, வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி, நடராஜபுரம் தெருவைச் சேர்ந்த மனோஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.