

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் தனிப்படை மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
குற்றவாளியை தேடும் பணிக்காக திருவள்ளூர் எஸ்பி விவேகானந்தா சுக்லாவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
17 தனிப்படைகள் மற்றும் 3 சிறப்புக் குழுக்களை சேர்ந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் உட்பட 500 போலீஸார் தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளிலும் குற்றவாளியை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் சோழவரம் அருகே மஞ்சங்காரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.