

கரூர்: தோகைமலை அருகே சுமை மினி வேன் கவிழ்ந்து 2 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகேயுள்ள கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 7-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்டம் கூடலூருக்கு நேற்று விறகு வெட்ட சென்றுவிட்டு மீண்டும் நேற்றிரவு சுமை மினி வேனில் ஊருக்கு திரும்பியுள்ளனர். ஓட்டுநர் ராஜசேகர் வாகனத்தை ஓட்டியுள்ளார்.
உடையாபட்டியில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தப்போது நேற்றிரவு 10.30 மணிக்கு வாகனம் நிலை தடுமாறி அருகில் இருந்த வேப்பமரத்தில் மோதி அருகேயிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுமை மினி வேனில் பயணம் செய்த சாமிபிள்ளை புதூரை சேர்ந்த வீரமலை (65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த காளப்பட்டி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன் (65), ஓட்டுநர் ராஜசேகர் உள்ளிட்டவர்களை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓட்டுநர் ராஜசேகர் உள்ளிட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.