வேலூரில் வரதட்சணை கொடுமை: மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிய கணவர் கைது

வேலூரில் வரதட்சணை கொடுமை: மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிய கணவர் கைது
Updated on
1 min read

வேலூர் சதுப்பேரியைச் சேர்ந்த நர்கீஸ் (21) என்பவர் இடுப்பு, கால் எலும்புகள் முறிந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஆம்புலன்ஸில் வந்து மனு அளித்தார்.

அவரிடம், மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி நேரில் மனுவை பெற்றுக்கொண்டு சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அப்போது, அவர்களிடம் நர்கீஸ் அளித்த புகார் மனுவில், "ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த எனக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பாபா என்பவரது மகன் காஜா ரபீக்குக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது, எனது கணவருக்கு 30 பவுன் நகை, இரு சக்கர வாகனம் வாங்க ரூ.1.50 லட்சம், 500 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.3 லட்சத்தில் சீர்வரிசை பொருள்கள், திருமண செலவாக ரூ.6 லட்சம் ஆகியவற்றை எனது பெற்றோர் அளித்திருந்தனர். நான், குறைவான நகை போட்டு வந்ததாகக்கூறி எனது கணவர், அவரது குடும்பத்தினர் என்னை துன்புறுத்தி வந்தனர்.

தொடர்ந்து, ரூ.10 லட்சமும், எனது பெற்றோர் வசிக்கும் வீட்டை எனது கணவரின் பெற்றோர் பெயருக்கு எழுதி தருமாறு கொடுமை செய்தனர். இதையடுத்து, வேலூர் சதுப்பேரியில் தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த ஜூன் 3-ம் தேதி எனது கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதில், எனக்கு இடுப்பு, இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு நகர முடியாமல் உள்ளேன். தற்போது வரை உறவினர்களிடம் கடன் பெற்று ரூ.6 லட்சம் சிகிச்சை செலவு செய்துள்ளேன். இது குறித்து, அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரியூர் காவல் துறையினருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நர்கீஸின் கணவர் காஜா ரபீக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in