டிராக்டர் தயாரிப்பு வரைபடத்தை சட்ட விரோதமாக விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன் - மனைவி கைது
சென்னை: டிராக்டர் தயாரிக்கும் வரைபடத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைதாகினர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான டிராக்டர் தயாரிக்கும் வரைபடங்கள் மற்றும் இதர ஆவணங்களைத் திருடி சிலர் போட்டி நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் 2005-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அந்த நிறுவனத்தில் பணி செய்த கணவன், மனைவியான தஞ்சாவூர் மாவட்டம், வீரியன் கோட்டையைச் சேர்ந்த ராஜா (55), அவரது மனைவி விஜயலட்சுமி (52) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் அவர்கள் தலைமறைவாகினர்.
இதையடுத்து, கடந்தாண்டு சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றம் இருவருக்கும் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா தலைமையிலான தனிப்படை போலீஸார் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம், வீரியன்கோட்டை, பேராவூரணியில் பதுங்கியிருந்த ராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
