

சென்னை: அயனாவரம் ஏகாங்கிபுரம், 4-வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (38). இவரது மனைவி ரெபேக்கா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் மகள் ஸ்டெபி ரோஸ் (7). சதீஷுக்கும், ரெபேக்காவும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை ஸ்டெபி ரோஸ் சதீஷிடம் இருந்த நிலையில், தன்னிடம் ஒப்படைக்குமாறு ரெபேக்கா நெருக்கடி கொடுத்து வந்தார்.
ஆனால் சதீஷ் குழந்தையை ஒப்படைக்க மறுத்துள்ளார். ரெபேக்கா அண்மையில் ஓட்டேரி காவல் நிலையத்தில், குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என புகார் அளித்தார். இதன் காரணமாக மகளை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சில நாட்களாக சதீஷ் மிகவும் சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சதீஷ், மகளுடன் ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள ஓர் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு அறை எடுத்து தங்கினார். நேற்று அதிகாலை தனது சகோதரி கெசியாவை செல்போனில் தொடர்பு கொண்ட சதீஷ், மகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெசியா, உடனே சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்துள்ளார். அங்கு அவர் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன், சதீஷ் தங்கியிருந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு குழந்தை ஸ்டெபி ரோஸ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது. சதீஷ் தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த பரங்கிமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிறுமி ஸ்டெபி ரோஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.