திமுக பேனர்கள் கிழிப்பு, ரகளை: விழுப்புரத்தில் 50 பாமகவினர் மீது வழக்குகள் பதிவு

திமுக பேனர்கள் கிழிப்பு, ரகளை: விழுப்புரத்தில் 50 பாமகவினர் மீது வழக்குகள் பதிவு
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு ஆர்ப்பாட்டம் எதிரொலியாக, பாமகவினர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமகவினர், அரசு பேருந்துகள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே வேனை நிறுத்தி முழக்கமிட்டனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இதனால், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து உதவி காவல் ஆய்வாளர் குணசேகர் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸார் 50 பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், பாமகவின் ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி பேனர் வைத்ததாக மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே அனுமதியின்றி பேனர் வைத்ததாக கோலியனூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஞானவேல், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் மீதும், நகராட்சி திடல் அருகே அனுமதியின்றி பேனர் வைத்ததாக மாவட்ட செயலாளர் பாலசக்தி உள்ளிட்ட 2 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீஸார் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் புதிய பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் வைத்திருந்த பேனரை கிழித்து சேதப்படுத்தியது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், 20 பாமகவினர் மீது விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், முதல்வர் உள்ளிட்ட திமுக தலைவர்களை தவறாக விமர்சித்தவர்கள் மற்றும் திமுக பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in