

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பொது இடத்தில் மீண்டும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்ற சுந்தரேசன், சட்ட விரோத மது விற்பனை, மது கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், அவரது அரசு வாகனம் பறிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த பிரச்சினையில், உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, நேர்மையாக செயல்பட்டதால் உயர் அதிகாரிகள் தனக்கு பல நிலை களில் அழுத்தம் கொடுப்பதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.
கூடுதல் விலைக்கு விற்பனை: இந்நிலையில், மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தர்காடு காவிரிக்கரை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையின் அருகே நேற்று காலை பொதுவெளியில் அட்டைப்பெட்டியில் வைத்துக்கொண்டு டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடை ஊழியரின் ஒத்துழைப்புடன் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பெற்று, நேற்று காலையில் ஜிபே வசதியுடன் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்ட நிலையில், போலீஸார் விரைந்து சென்று சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வம்(42) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்ட டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே, இத்தகைய சட்டவிரோத மது விற்பனை தொடங்கி விட்டதாக பலரும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.