

சென்னை: சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16-வது மெயின் ரோடு, கதிரவன் காலனியில் வசிப்பவர் எத்திராஜ் ரத்தினம் (55). இவர் கடந்த மாதம் 10-ம் தேதி அவரது விலை உயர்ந்த காரை வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது கார் திருட்டில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்யேந்திர சிங்ஷெகாவத் (45) என்பது தெரிந்தது. இதையடுத்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவரை சென்னை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கார் திருடியது எப்படி? - எம்பிஏ பட்டதாரியான சத்யேந்திர சிங் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் ஆரம்ப காலத்தில் ஊர் சுற்றி வந்துள்ளார். பின்னர், கார் ஷோரும்களுக்கு சர்வீஸ் செய்வது போல சென்று நோட்டமிட்டு, அங்கிருக்கும் விலையுயர்ந்த கார்களில் ஜிபிஎஸ் (GPS) கருவியை பொருத்தி, அந்த கருவி மூலம் கார்களின் இருப்பிடத்தை தொடர்ந்து நோட்டமிட்டுள்ளார்.
பின்னர், வீட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் கார்களை கள்ளச் சாவிகளைப் பயன்படுத்தி திருடிச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகம் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களில் இதேபோல் 100-க்கும் மேற்பட்ட கார்களை இதே பாணியில் திருடியுள்ளார். திருடிய கார்களை ராஜஸ்தான் கொண்டு சென்று விற்பது அல்லது நேபாளம் எல்லையில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் மிரட்டி பணம் பறித்தல் அல்லது கூலிக்கு கொலை செய்யும் கொடூர கும்பலான பிஷ்னோய் கும்பலுக்கும் கார்களை விற்பனை செய்துள்ளார்.இவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.