

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி சிறுமி உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதன் பின்பு சிறுமியை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், சிப் -காட் போலீஸார் விசாரணை நடத்தினர், அதில், 'கடந்த 1-ம் தேதி 3 மணி அளவில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவருடன் படிக்கும் 12 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் சேர்ந்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரிடம் மாணவி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சிப்காட் போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பொன்னேரி அரசு மருத்துவமனை முன்பு சிறுமிக்கு நீதி வேண்டுமென அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை போலீஸார் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒரு சம்பவம் - ஏற்கெனவே கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது